தமிழகத்தில் AIIMS மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய சுகாதார துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தமிழகம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் AIIMS மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன. தமிழகத்தில் மருத்துவ மனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, உள்ளிட்ட இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த 2015 ஏப்ரலில், மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. மத்திய குழுவின் இந்த ஆய்வு முடிந்தும் எந்த பதிலும் முடிவும் எடுக்கவில்லை. AIIMS மருத்துவமனை தமிழகத்தில் அமைவது குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய சுகாதார துறைக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் AIIMS மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.