இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
அதன்படி, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
3வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோசினிமா ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்டுகளிக்கலாம்.
இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு உகந்ததாக உள்ளது. மேலும்,ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் பனிப்பொழிவு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 28 டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி உள்ளது. இதில், இந்திய அணி 17 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது ஒரு ஆட்டத்தில் முடிவுகள் இல்லை.
இந்திய மண்ணில் இரு அணிகளும் இதுவரை 12 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த 12 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலிய அணி உத்தேச பிளேயிங் லெவன்: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, மற்றும் தன்வீர் சங்கா.