நம்மில் சிலருக்கு நம் நாட்டின் மீதும் நம் மண்ணின் மீதும் இருக்கும் பாசம் மாறுவதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நேஹா பாட்டியா.
லண்டனில் பணி புரிந்துகொண்டிருந்த அவர் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பினார். விவசாயத்தில் ஈடுபட்டார். இப்போது நேஹா விவசாயத்தால் ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இதனுடன், பல விவசாயிகளுக்கு கரிம வேளாண்மை பயிற்சி அளித்து அவர்களது வாக்கையையும் முன்னேற்றியுள்ளார்.
ஆக்ராவில் வசிக்கும் நேஹா பாட்டியா, 2014 இல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். நேஹா லண்டனில் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்து பின்னர் இந்தியா திரும்பினார். 2017 ஆம் ஆண்டில், அவர் ஆர்கானிக் ஃபார்மிங் அதாவது கரிம வேளாண்மையைத் தொடங்கினார். இன்று அவர் மூன்று இடங்களில் விவசாயம் செய்கிறார்.
31 வயதான நேஹா ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர். 'நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன். ஆனால் வியாபாரத்தால் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அது, சமூக நலன்களையும் சமூக தாக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன். மக்களும் இதன் மூலம் பயனடைய வேண்டும். இருப்பினும், அப்போது நான் விவசாயத்தைப் பற்றி நினைக்கவில்லை.” என்று நேஹா கூறுகிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு நேஹா ஒரு சமூக அமைப்பில் சேர்ந்தார். ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் 2012 இல் லண்டனுக்கு சென்றார். அவர் 2015 இல் லண்டனில் இருந்து திரும்பியபோது, மீண்டும் ஒரு சமூக அமைப்பில் சேர்ந்து சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
நேஹா பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டார். ஆரோக்கியமான உணவுகள் தான் மிகப்பெரிய பிரச்சினை என்பதை மக்களின் பிரச்சினைகள் வெளிப்படுத்தியதாக நேஹா கூறுகிறார். நகரம் மட்டுமல்ல, கிராம மக்களும் சரியான உணவைப் பெறுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் சரியான மற்றும் தூய்மையான உணவைப் பெற, 2016 ஆம் ஆண்டில் தூய்மையான உணவு இயக்கத்தை தொடங்க நேஹா திட்டமிட்டார். இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார், பல நிபுணர்களைச் சந்தித்தார். சரியான உணவை சாப்பிட வேண்டுமானால், அதை சரியாக வளர்க்க வேண்டும் என்று அனைவரும் கூறினர். தானியங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமாக இரசாயனங்களும் யூரியாவும் கலந்திருந்தால், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு சரியாக இருக்காது.
இதுபோன்ற சூழ்நிலையில், கரிம வேளாண்மையைத் தொடங்க நேஹா திட்டமிட்டார். ஆனால் விவசாயம் குறித்த அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை. விவசாயத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் பல கிராமங்களுக்குச் சென்று 6-7 மாதங்கள் விவசாயம் குறித்து தெரிந்து கொண்டார். இதன் பின்னர் அவர் நோய்டாவில் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் கரிம காய்கறிகளை பயிரிட்டார். விவசாயத்தில் நேஹாவின் ஆரம்ப கட்டம் ஏமாற்றமளித்தது. ஆனால் இரண்டாவது முறையாக அவர் செய்த விவசாயம் நல்ல விளைச்சலுக்கு வழிவகுத்தது. இதற்குப் பிறகு, அவர் தனது கரிமப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று மக்களைச் சந்தித்து இந்த தயாரிப்புகளின் நன்மைகளை விளக்கினார்.
சில நாட்களுக்குப் பிறகு தங்களுக்கு நல்ல பின்னூட்டம் கிடைத்ததாகவும் நோக்கமும் அதிகரித்ததாகவும் நேஹா கூறுகிறார். நோய்டாவுக்குப் பிறகு, அவர் முசாபர்நகர் மற்றும் பீம்தாலிலும் விவசாயத்தைத் தொடங்கினார். நேஹா தற்போது 15 ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் மற்றும் கரிம மூலிகைகள் பயிரிடுகிறார். அவரது அணியில் மொத்தம் 20 பேர் பணியாற்றுகின்றனர். இது மட்டுமல்லாமல், ஏராளமான விவசாயிகள் அவர்களுடன் சேர்ந்து கரிம வேளாண்மையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.