Ravichandran Ashwin: இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மூன்று பதிப்புகளிலும் குறைந்தது 50 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கான்பூரில் உள்ள கிரீன் பார்க்கில் தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியில், இரண்டாவது விக்கெட்டை வீழ்த்திய போது இந்த சாதனையை படைத்தார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 182 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் நாதன் லியோன் (187 விக்கெட்) உள்ளார்.
அஷ்வின் 2019-21 WTC சுழற்சியில் 14 போட்டிகளில் 71 விக்கெட்களை எடுத்துள்ளார். 2021-23 WTC சுழற்சியில் 13 போட்டிகளில் 61 விக்கெட்களை எடுத்துள்ளார். தற்போதைய சுழற்சியில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் மற்றும் பாட் கம்மின்ஸ் மற்றும் நியூசிலாந்தின் டிம் சவுதி ஆகியோர் இதுவரை மூன்று WTC பதிப்புகளில் விளையாடி உள்ளனர். ஆனால் இரண்டு முறை மட்டுமே 50 விக்கெட்டிற்கு மேல் எடுத்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைக்க அஷ்வினுக்கு இன்னும் 6 விக்கெட்கள் மட்டுமே தேவை. பங்களாதேஷ் டெஸ்ட் தொடரிலேயே அதனை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.