Kalaignar Special Loan Scheme: தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கியில் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இது யார் யாருக்கு வழங்கப்படும், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி என்பதே சுருக்கமாக தாய்கோ வங்கி (TAICO Bank) என்றழைக்கப்படுகிறது. இது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டதாகும். இந்நிலையில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) ரூ.20 லட்சம் வரை குறுந்தொழில் புரியம் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்தை (Kalaignar Credit Scheme) தாய்கோ வங்கியின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் என்பது ரூ.25 லட்சத்திற்கு மிகாத அளவில் இயந்திரங்களை நிறுவி, உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும்.
இந்த நிறுவனங்கள் தங்களின் தொழில் அபிவிருத்திக்கு வெளியில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். வெளியில் அதிக வட்டிக்கு வாங்க வேண்டிய சூழல் இருப்பதால், தமிழ்நாடு அரசு 7 சதவீத வட்டி விகிதத்தில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில், குறுந்தொழில் நிறுவனங்கள் ரூ.20 லட்சம் வரை தாய்கோ வங்கியின் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். இது கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்தின் (Kalaignar Special Loan Scheme) அடிப்படையில் தாய்கோ வங்கியால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை சட்டப்பேரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் அறிவித்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அறிவித்தார்.
எனவே, குறுந்தொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தின்கீழ் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு உங்களின் அருகில் உள்ள தாய்கோ வங்கியின் (Taico Bank) மேலாளரை அணுகி, அவர்களின் வழிகாட்டுதலின்படி விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கி 1961ஆம் ஆண்டில் தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வசதி அளிப்பதற்கு என தொடங்கப்பட்டதாகும்.
இந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறுகிய கால கடன்கள், அதிகப்பற்று கடன்கள் உள்ளிட்ட பல வகையில் நிதியுதவி அளிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சில கடன் உதவிகளை வழங்கி வருகிறது.
பொதுமக்கள் இந்த வங்கியில் வீடு கட்டுவதற்கு கடன், வீடு அடைமானக்கடன், நகைக் கடன் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், அரசுத் துறை பணியாளர்களுக்கும், பொதுத்துறை பணியாளர்களுக்கும் தனிநபர் கடன் போன்ற நிதி உதவிகளும் அளிக்கின்றன.