20 ஓவர் உலக கோப்பையில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐசிசி தரவரிசை பட்டியலில் டாப் 10 லிஸ்டில் இருக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் 2 இடங்களுக்காக குரூப் பிரிவில் மோதின. இதில் 2 முறை 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.
மேலும் படிக்க | குரூப்-ஏ போட்டிகள் ஓவர்... இந்திய அணியின் பிரிவில் சேரப்போவது யார்?
இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பிரன்டன் கிங் மட்டும் 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் யாரும் பக்கபலமாக இருந்து விளையாடவில்லை. சார்ல்ஸ் 24 ரன்களும், ஓடியன் ஸ்மித் 19 ரன்களும் எடுத்தனர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று, 20 ஓவர் உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையலாம் என்ற கனவுடன் அயர்லாந்து களமிறங்கியது.
ஆரம்பம் முதலே அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிர்லிங், நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடி 48 பந்துகளில் 66 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதிரடியாக விளையாடிய பால்பிரைன் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 37 ரன்களுக்கு அவுட்டானாலும், அவருக்கு பின் வந்த டக்கர் 45 ரன்கள் எடுத்து ஸ்டிரிலுங்குடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
மேலும் படிக்க | T20 world cup: ரிசர்வ் நாளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
20 ஓவர் உலக கோப்பையில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபமான தோல்வியுடன் குரூப் ஸ்டேஜூடன், இந்த உலக கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது.