3 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்கக் கூடாது என்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றோம் என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கு.ராதாமணியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்லெ்வம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர் கு.ராதாமணி என புகழஞ்சலி செலுத்தினார். ராதாமணியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் பேசினார். கு.ராதாமணியின் செயல்பாடுகள் திறம்பட அனைவராலும் பாராட்டப்படக் கூடிய வகையில் எப்போதும் அமைந்திருக்கும். இதனால் மக்களுடைய மனங்களிலே சிறப்புக்குரிய இடத்தை கு.ராதாமணி பெற்றிருந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார். நம் முன் தற்போது படமாக மட்டுமல்ல ஒரு சிறந்த பாடமாகவும் ராதாமணி விளங்கி கொண்டிருப்பதாக, ஸ்டாலின் புகழுரைத்தார். ஓராண்டு, ஈராண்டு அல்ல 33 ஆண்டு காலம் ஒன்றிய கழகத்தின் செயலாளராக இருந்துள்ளார் ராதாமணி. இதுவே பெரும் சாதனை தான் என பாராட்டினார்.
இதை தொடர்ந்து அவர் பேசுகையில்; தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றது குறித்து பேசினார். அப்போது, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கக்கூடாது என்பதற்காக தான் நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்பப்பெறப்பட்டது என தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் "திமுக என்ற புலி சட்டமன்றத்தில் பதுங்குவது பாய்வதற்காகத்தான்" என அதிரடியாக பேசினார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆவதை விட திமுகவில் பொறுப்பை வகிப்பது தான் முக்கியம் என கூறினார்.