கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ஆம் தேதி தான் துவங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.
இந்த நிலையில் கேரளாவில் வருகிற 18-ஆம் தேதி முதல் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.
மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18-ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவ்விரு மாவட்டங்களுக்கும் 19-ஆம் தேதி ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kerala: Indian Meteorological Department (IMD) issues red alert (very heavy rain to extremely heavy rain) for Idukki and Malappuram districts on 18th July. pic.twitter.com/wxsuZbGekW
— ANI (@ANI) July 16, 2019
இந்த பருவ மழை வரும் 18-ஆம் தேதி துவங்கி ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையின்கீழ், கோவளம், விழிஞ்சம், வடகரா போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.