ரெயில் என்ஜின் இல்லாத ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற அதிவேக ரெயில் சேவையை டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
"வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயில்களுக்கு என்ஜின் தனியாக இருக்காது, பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும்.
PM @narendramodi at the flagging off ceremony of #VandeBharatExpress in New Delhi pic.twitter.com/JA1zUPQClE
— PIB India (@PIB_India) February 15, 2019
மணிக்கு சுமார் 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் வேகமாக நடைப்பெற்றது.
இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இன்று டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு, பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.