ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விசாரணை விவரங்கள் பொதுவெளி்யில் வெளியாகாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன் கோகாய். நீதிபதி பாப்டே தலைமையிலான இந்த குழுவில் இந்திராபானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்த உள்விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The three member in-house committee of the Supreme Court has found no substance in the sexual harassment allegations against Chief Justice of India Ranjan Gogoi. pic.twitter.com/cG4yVB8ViR
— ANI (@ANI) May 6, 2019
முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் வரை, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற இளநிலை உதவியாளராக பணியாற்றிய அந்தப்பெண் அக்டோபர் 2016 முதல் அக்டோபர் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கோகாயின் நீதிமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர். இந்த புகாரை அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பியும் வைத்தார்.
அவரது புகாரில் ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் அவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனினும் அவரின் புகாருக்கு ரஞ்சன் கோக்காய் மறுப்பு தெரிவித்தார். மேலும் தான் 20 வருட காலமாக நீதித் துறையில் பணியாற்றி வருவதாகவும், சுய லாபம் இல்லாத எனது சேவையில், தற்போது என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் நீதிபதி பொறுப்பில் தான் மிகவும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனவும், இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்லது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னால் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன் கோகாய். நீதிபதி பாப்டே தலைமையிலான இந்த குழுவில் இந்திராபானர்ஜி, இந்து மல்கோத்ரா இடம்பெற்றிருந்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த உள்விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் புகார் மீது போதிய ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.