Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ஆம் தேதி அன்று வன்முறை வெடித்ததில் இருந்து குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மர் நாட்டு எல்லையில் உள்ள மணிப்பூர், குகி பழங்குடியினர் குழுவானது பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான இருக்கும் மெய்டீஸ் உடன், பழங்குடியினருக்கு வழங்கப்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் உள்ளது. இதையொட்டி, மே 3 அன்று மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தப்பட்டு, Meitei சமூகத்தின் பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரிக்கைக்கு குக்கி பழங்குடிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் தான் அங்கு இன கலவரம் உச்சியை அடைந்தது எனலாம்.
சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு, ஆயிரக்கணக்கான துணை ராணுவம் மற்றும் ராணுவத் துருப்புக்களை மத்திய அரசு விரைந்த பிறகு பிரச்சனை தணிந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆங்காங்கே வன்முறை மற்றும் கொலைகள் விரைவில் மீண்டும் தொடங்கி மாநிலம் பதற்ற நிலையிலேயே உள்ளது. மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் முடிவு
இரு பெண்களை நிர்வாணப்படுத்தி, சாலையில் நடக்கவைத்து வன்முறை சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு பின், அங்கு நிலவும் பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. மேலே குறிப்பிட்ட அந்த வீடியோ மே 4ஆம் தேதி நடந்த சம்பவத்தின் பதிவாகும். சுமார் 77 நாள்களுக்கு பின்னரே கடந்த வாரம் வெளியானது.
முன்பு மணிப்பூரில் இணையம் முடங்கியிருந்த நிலையில், தற்போது சற்று இணைய சேவைகள் திரும்பியுள்ளதால் பல்வேறு தகவல்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், மணிப்பூரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த வாரம் உள்ளூர் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வீரரை இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஒரு சிசிடிவி ஆதாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. ராணுவ சீருடையில் இருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் சதீஷ் பிரசாத் கையில் INSAS துப்பாக்கியுடன் இருக்கும் வேளையில், ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஜூலை 20ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகவும், துணை ராணுவப் படைக்கு புகார் வந்ததையடுத்து, குற்றச்சாட்டு சரிபார்க்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, அந்த வீரர் அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலத்தில் இனக்கலவரத்தை அடுத்து பாதுகாப்புப் பணிகளுக்காக தற்காலிகப் பிரிவாக மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட படையின் எண் 100 பட்டாலியனைச் சேர்ந்த தலைமைக் காவலருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதிகாரி கூறினார். இதுபோன்ற செயல்களை BSF சகித்துக்கொள்ளாது என்றும், இந்த சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ