சொந்த வீடு இல்லாம வராத - மாதவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி

சொந்த வீடு இல்லாமல் வீட்டுக்குள் வரக்கூடாது என தனது மனைவி கூறிவிட்டதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 23, 2022, 02:21 PM IST
  • ராக்கெட்ரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
  • ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது ராக்கெட்ரி திரைப்படம்
  • விஞ்ஞானி நம்பிநாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது படம்
சொந்த வீடு இல்லாம வராத - மாதவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி title=

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட  இந்த திரைப்படம் ஜூலை 1, 2022 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஆர். மாதவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காக  தனது உடலில் உருவாக்கிய மாற்றத்தின் சில புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை திரையிட்டார். 

Madhavan

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தையை மாதவன் எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மாதவன், “எனக்கென்று சொந்த வீடுகூட இல்லை. எனது ஆசை சொந்தமாக வீடு கட்டிட வேண்டுமென்பதுதான். முதலில் வீடு கட்டு. பிறகு படம் எடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார். இதற்கு பிறகும் படம் எடுக்கிறேன் என சுற்றுவதை என் மனைவி விரும்பவில்லை. அதுமட்டுமின்றி சொந்த வீடு இல்லாமல் வீட்டுக்குள் வரக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல் நம்பி நாராயணனின் கெட்டப்பில் நான் இருந்தபோது எனது மனைவி வந்து எனக்கு முத்தம் கொடுத்தார். அந்த வீடியோவாக எடுத்து என் மனைவியின் அண்ணனுக்கு அனுப்பினேன். உடனே அவர் பதறி எனக்கு ஃபோன் செய்து வீடியோவில் இருப்பது யார் என கேட்டு என்னை திட்டிவிட்டார்” என்றார்.

Madhavan

மேலும் படம் குறித்து பேசிய மாதவன், “ விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து  வெளியே வந்த பிறகுதான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். 

ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதென்றால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுப்பூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். 

Madhavan

“ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்" என கூறினேன். ஆனால் அவர், "ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க | நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!

அதுதான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது  அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என கேட்டார்.  "நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்றேன்.

மேலும் படிக்க | தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி! என்னா லவ்வு!

அதற்கு அவர் பதிலளிக்கையில்,"நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன் என்று சாதாரணமாக கூறிவிட்டார். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.  நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. ஆனால் அவர்பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பது ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News