நந்தினி கொலை வழக்கு: நீதி கிடைத்தாக வேண்டும் -கமல்ஹாசன்

Last Updated : Feb 4, 2017, 05:12 PM IST
நந்தினி கொலை வழக்கு: நீதி கிடைத்தாக வேண்டும் -கமல்ஹாசன் title=

சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். 

இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கமல் பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி(17) டிசம்பர் 29-ம் தேதி காணாமல் போனார். 15 நாட்களுக்கு பிறகு  சிறுமி கடந்த ஜனவரி 14-ம் தேதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கிய மணிகண்டன், நண்பர்களுடன் கூட்டாக பலாத்காரம் செய்து அவளது வயிற்றில் இருந்த கருவை எடுத்து எரித்துள்ளான். நந்தினியை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் நந்தினியின் உறவினர்கள் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரையும் கைது செய்யக் கோரி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத்தினர் அரியலூரில் ஜனவரி 28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேக் உடன் ஃபேஸ்புக்கிலும்,  டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்ட பதிவு:- நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை. குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு:-

 

 

 

 

 

 

Trending News