இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடும் ஆகாஷ் தீப் கிரிக்கெட் பயணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சோக கதை இருக்கிறது.
இந்திய அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார் ஆகாஷ் தீப். தனது அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை காலி செய்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய ஆகாஷ் தீப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பீகாரின் சசாராம் பகுதியை சேர்ந்தவரான ஆகாஷ் தீப் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். படிப்பை விட கிரிக்கெட்டில் அதிக ஆர்வமுடன் இருந்ததால் ஆகாஷ் தீப்பின் தந்தை, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவரை கிரிக்கெட் விளையாட வேண்டாம் என வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து மேற்குவங்க மாந்லத்தின் துர்காபூர் நகருக்கு வேலை தேடி சென்ற அவர், உறவினர் ஒருவரின் ஆதரவுடன் மீண்டும் கிரிக்கெட் பாதைக்கு திரும்பினார். அங்குள்ள அகாடமி ஒன்றில் இணைந்து விளையாடி பலரையும் தனது வேகப்பந்துவீச்சால் ஈர்த்தார்.
இருப்பினும் அடுத்த கட்டத்துக்கு அவர் செல்வதற்கு முன்பாக பள்ளி ஆசிரியரான அவரின் தந்தை காலமானார். இரு மாதங்களில் அவரின் மூத்த சகோதரரும் காலமாகவே குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது.
தாயாரை பார்த்துக்கொள்வதற்கு பணம் இல்லாததால் வேறு வழியின்றி தான் பெரிதும் நேசித்த கிரிக்கெட்டை விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதற்காக கொல்கத்தாவுக்கு சென்று அங்கு வேலை பார்த்து குடும்ப கஷ்டத்தை நிவர்த்தி செய்தார்.
இதனிடையே, மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தீவிரப்படுத்தி U - 23 வங்காள கிரிக்கெட் அணியில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்றார். நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்திய நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை 2022-ல் ஏலத்தில் எடுத்தது.
அண்மையில் இந்திய ஏ அணிக்காக விளையாடியபோது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்ததால், இப்போது இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து சாதித்துள்ளார்.