ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் (Hardik Pandya Natasa Stankovic) ஆகியோரின் விவாகரத்து கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், இதேபோல் மறைந்த கிரிக்கெட் வீரர் ஒருவரின் விவாகரத்து பெரும் புயலை முன்பு கிளப்பியது. அது யார் என்பதை இதில் காணலாம்.
கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து ஒன்றும் புதிதில்லை என்றாலும் இந்த கிரிக்கெட் வீரரின் விவாகரத்தில் இவர் கொடுத்த ஜீவனாம்சம்தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நான்கு ஆண்டுகளாக திருமண உறவில் இருந்த ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி, தாங்கள் பிரிந்துவிட்டதாக நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தனர்.
2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2020ஆம் ஆண்டு லாக்டவுணில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு அகஸ்தியா என ஒரு மகனும் உள்ளார். 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவர்கள் தற்போது பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கும் நிலையில், சட்ட ரீதியாக விரைவில் விவகாரத்தை பெறுவார்கள் என தெரிகிறது. பரஸ்பர விவாகரத்து என்பதால் வழக்கும் விரைவாக முடிந்துவிடும் எனலாம்.
விவாகரத்துக்கு பின், நடாஷாவுக்கு தனது சொத்தில் 70 சதவீதத்தை ஜீவனாம்சமாக பாண்டியா கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பின்னரே தெரியவரும். ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 90 கோடி அளவில் சொத்து மதிப்பு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் அவர் கொடுத்த ஜீவனாம்சமே பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஷேன் வார்னே - சிமோன் காலஹான் ஆகியோர் 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சம்மர் வார்னே, ப்ரூக் வார்னே, ஜேக்சன் வார்னே என மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த ஜோடிக்கு கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தானது. ஷேன் வார்னே பல பெண்களுடன் உறவில் இருப்பதாகக் கூறி காலஹான் விவகாரத்து கேட்டார்.
இவர்களின் விவகாரத்து வழக்கு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது. அதில், சிமோன் காலஹானுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 90 கோடி அளவில் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்பின் ஷேன் வார்னே யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை, 2022ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்தார்.