மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, அதன் ருசியை நினைத்து பலருக்கும் நாவில் நீர் ஊறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
ஒரு சில வியாபாரிகள் இலாப நோக்குடன் 'கார்பைட் கல்' வைத்து, செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் மூலம், தலைச்சுற்றல், தூக்கம், மனக் குழப்பம் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கால்சியம் கார்பைடு ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், நரம்பியல் அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது ஹார்மோன் செயல்பாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.
எனவே இயற்கை முறையில் பழுத்த ஆரோக்கியமான பழங்களை உண்பது அவசியமாகும். மாம்பழங்கள் இயற்கையாக பழுத்திருக்கிறதா இல்லையா என்பதை அறிய சில வழிமுறைகள் உள்ளது.
மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடும் போது மாம்பழங்கள் மூழ்கினால் அவை இயற்கையாகவே பழுத்த பழம் என அறிந்து கொள்ளலாம் . மாறாக பழம் நீரில், மிதந்தால் அவை செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டவை என அறிந்து கொள்ளலாம்.
செயற்கையாக பழுத்த மாம்பழத்தில், பச்சை நிற திட்டுகள் இருக்கலாம் என்கின்றனர். இந்த திட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)