உலகக் கோப்பையில் 7ஆவது வெற்றியை பெற்றுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறிய கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி இன்று மோதியது. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் பட்டத்தை வென்ற நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்களை குவித்து அசத்தினார். இதில், இந்தியா 357 ரன்களை குவித்தது.
இது ஒருபுறம் இருக்க மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின் ஷ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஷார்ட் பிட்ச் பந்தில் அவருக்கு வீக்னஸ் இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,"நான் எத்தனை ஷார்ட் பந்துகளை பவுண்டரி அடித்திருக்கிறேன் என்று பார்த்தீர்களா? நீங்கள் ஒரு ஷாட்டை அடிக்க முயற்சித்தால், அது ஷார்ட் பால் அல்லது ஓவர் பிட்ச் பாலாக இருந்தாலும், நீங்கள் எப்படியும் அவுட்டாகலாம். நான் 2-3 முறை போல்டை பறிகொடுத்தால், அவரால் ஸ்விங் பந்துகளில் விளையாட முடியாது என்று நீங்கள் கூறுவீர்கள்" என்றார்.
மேலும் அவர், "வீரர்களாக, நாங்கள் எந்த விதமான பந்தையும் அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என்னால் ஷார்ட் பால் விளையாட முடியாது என்ற சூழலை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அதை சிலர் எடுத்துக்கொள்வதாக நான் உணர்கிறேன், அது ஒருவர் மனதில் தொடர்ந்து தாக்கம் செலுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து அதே வேலையை செய்கிறீர்கள்" என்றார்.
ஷ்ரேயாஸ் மேலும்,"மும்பை மற்றும் வான்கடேவில் இருந்து வளர்ந்தவன். இந்தியாவில் உள்ள மற்ற ஆடுகளத்தை விட இது அதிகமாக பவுன்ஸ் அதிகமாக இருக்கும். அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். நான் ஷாட்களை அடிக்கச் செல்லும்போது, நான் அவுட்டாகும் வாய்ப்பும் இருக்கும். சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் அது இல்லாமல் போகும். பெரும்பாலான நேரங்களில், இது எனக்கு வேலை செய்யவில்லை. அதனால்தான் இது எனக்கு ஒரு பிரச்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் என் மனதில், எந்த பிரச்சனையும் இல்லை என்று எனக்குத் தெரியும்" என்றார்.
ஷ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடி 216 ரன்களை அடித்துள்ளார். இன்று அவர் 82 ரன்களை குவித்தது நினைவுக்கூரத்தக்கது.