Dwayne Bravo: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ பொறுப்பேற்க உள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக 2011ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் பிராவா ஓய்வுபெற்ற பின்னர் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.
டுவைன் பிராவோ (Dwayne Bravo) கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த நிலையில், அடுத்த 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகேஆர் (Kolkata Knight Riders) அணியின் ஆலோசகராக கடந்த சீசனில் கௌதம் கம்பீர் செயலாற்றிய நிலையில், அந்த இடத்திற்கு டுவைன் பிராவோவை அந்த அணி தற்போது நியமித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கடந்த 10 ஆண்டுகளாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறேன். பல்வேறு டி20 தொடர்களில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன்" என்றார்
மேலும் அவர்,"அவர்கள் செயலாற்றும் திறன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. கிரிக்கெட் மீதான உரிமையாளரின் ஆர்வம், நிர்வாகத்தின் தொழில்முறையான அணுகுமுறை, அணியில் நிலவும் குடும்பம் போன்ற சூழல் ஆகியவை கேகேஆர் அணியை சிறப்பான இடமாக்குகின்றன. நான் ஒரு வீரராக இருந்து அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பிலும், பயிற்சி அளிக்கும் நிலைக்கும் மாறும்போது இது எனக்கு சரியான தளம்" என்றார்.
டி20 போட்டிகளில் மட்டும் பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 7000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார், 582 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பிராவோ CPL தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், ஐக்கிய அரபு அமீரகம் டி20 லீக்கில் அபு தாபி நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், MLC என்ற அமெரிக்காவில் நடைபெறும் டி20 லீக்கில் லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணிக்காவும் பிராவோ விளையாடி உள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுவரை டுவைன் பிராவோ விளையாடினார். அதற்கு முன்பு அவர் மூன்று சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
2022ஆம் ஆண்டு ஓய்வுக்கு பின் அவர் சிஎஸ்கே அணிக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். 2023 மற்றும் 2024 சீசனில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் உள்ளிட்ட பல இளம் வீரர்களை வளர்த்தெடுத்தார். இவர் தனது அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து நேற்று முற்றிலுமாக ஓய்வு பெற்றார்.