Navarathri Worship : இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் காலம்காலமாக தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தாலும், பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
நவராத்திரியை, பண்டிகை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது. இது ஒரு கலாச்சார பாரம்பரியம் மட்டுமல்ல, இந்துக்களின் இந்தியாவின் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலான ஆன்மீக கொண்டாட்டம். நவராத்திரியில் சக்திபீடங்களில் உள்ள அன்னைக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
இந்த குரோதி ஆண்டில் நவராத்திரியின் ஏழாம் நாள் இன்று மகாசப்தமி நாளாகும். மகாசப்தமியில் 51 சக்திபீடங்களிலும் அன்னை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இறைவன் சிவபெருமான், தனது மனைவி சதியின் உடலை ஏந்தியவாறு நடனமாடியபோது, அன்னை சக்தியின் உடல்பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை 51 சக்தி பீடங்களாக வணங்கப்படுகின்றன. இவை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ளன
நவராத்திரியின் எழாம் நாளில், அசுரர்களை வதம் செய்வதற்காக அம்பிகை, உக்கிரமாக காளி வடிவம் எடுத்து புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அசுரர்களுடனான போர் உச்ச கட்டத்தில் இருந்து, மிக கொடிய அசுரர்களை அம்பிகை வதம் செய்ததும் இந்த ஏழாவது நாளில் தான் என்பது நம்பிக்கை
நவராத்திரியின் 7ம் நாளான மகா சப்தமியான இன்று, மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது இன்னும் சிறப்பானது, ஏனென்றால், மூலம் நட்சத்திரத்தில் தான் சரஸ்வதி தேவி அவதரித்தார். அவதரித்த நட்சத்திரத்திலேயே சரஸ்வதி பூஜை வழிபாட்டின் ஆரம்ப நாள் வருவதால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், என நமது திறமைகளில் அதிக ஆற்றலுடன் தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள் தேவை.
வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து, தொடர் வெற்றிகள், முன்னேற்றம் ஆகியவற்றை பெற சக்திபீடங்களில் உள்ள ஆதி சக்தியை வழிபடுவது நல்லது
சரஸ்வதி தேவிக்கு உரிய நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் செய்யும் வழிபாடானது, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை விலக செய்யும் என்பதால் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஸ்ரீசக்கர வழிபாடு என்பது நவராத்திரியில் மிகவும் முக்கியமானது.
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது