Pongal Gift | பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamilnadu Government Pongal gift package update | பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift) வாங்கியவர்களுக்கும், வாங்காதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் உடனடியாக சென்று வாங்கிக் கொள்ளுங்கள்.
இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கையில், " தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்" எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்கள்
அதன்படி, கடந்த 09.01.2025 அன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை நியாயவிலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் 50,000 பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 11.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கூறியுள்ளார்.