இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
தம்புல்லாவில் நேற்று நடந்த இந்த போட்டியில் இந்தியா அணி டாசில் வென்ற முதலில் பந்துவீசியது. இலங்கை தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, குணதிலகா களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இலங்கை 43.2 ஓவரிலேயே 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 36 ரன் எடுத்து (50 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்துவீச்சில் அக்சர் 3, கேதார், சாஹல், பூம்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ரோகித் 4 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இந்தியா 28.5 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தவான் 132 ரன் (90 பந்து, 20 பவுண்டரி, 3 சிக்சர், கோஹ்லி 82 ரன்னுடன் (70 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி பல்லெகலே மைதானத்தில் 24ம் தேதி நடைபெற உள்ளது.