டெல்லி: IPL 2019 தொடரின் இறுதி போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின.
இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியால் சென்னை அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அவர் 59 பந்தில் 80 ரன்கள் அடித்தார். அவர் சென்னை அணி வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட் ஆனார். ஒருவேளை அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்கக்கூடும்.
முதல் ஓவர் முதல் கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சனுக்கு காலில் காயம் ஏற்ப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் அணியின் வெற்றியாக தொடர்ந்து ஆடினார். ஆனால் இதுக்குறித்து யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் இதுக்குறித்து சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் Hindustan Times பத்திரிக்கையின் கட்டுரையை பகிர்ந்து காலில் ஏற்பட்ட காயத்துடன் ஷேன் வாட்சன் ஆடியதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய காயத்தையும் மறைத்து அணிக்காக வாட்சன் போராடியதாகவும், போட்டிக்கு பிறகு அவரது காலில் 6 தையல்கள் வரை போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. நீங்க வேற லெவல்! வீ லவ் யூ வாட்சன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வாட்சனை கொண்டாடி வருகின்றனர். மேலும் #WatsontheLegend என்ற ஹெஷ்டாக் மூலம் அவரை புகழ்ந்து வருகின்றனர்.