இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன்மை தானத்தில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் இருந்து தவான், விக்கெட் கீப்பர் சஹா, முதல் டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தப் போட்டியிலும் ரகானே இடம்பெறாதது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் விராத் கோலியின் அணி தேர்வு குறித்து சேவாக், சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக, தவானை நீக்கியிருக்கிறார்கள். புவனேஷ்வர்குமாரை காரணமே இல்லாமல் உட்கார வைத்திருக்கிறார்கள்.
இப்போது நடக்கும் இரண்டாவது டெஸ்டில் சரியாக விளையாடவில்லை என்றால் விராத் கோலி, அடுத்த போட்டியில் ஆடும் லெவனில் இருந்து தன்னைத்தானே வெளியேற்றிக்கொள்ள வேண்டும். புவனேஷ்வர்குமாரை நீக்கியது சரியான முடிவல்ல.
அவரது தன்னம்பிக்கையை குலைத்து, காயப்படுத்திவிட்டார் விராத் கோலி. முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஒருவரை இரண்டாவது டெஸ்டில் சேர்க்காமல் உட்கார வைத்திருப்பது நியாயமானதல்ல என்று கூறியுள்ளார்.