நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தழிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உழவர் பெருமக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட தமிழ்நாடு அரசு அதிக விலையை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் நிர்ணயித்து வருகிறது.இந்தவகையில், நடப்பு ஆண்டிற்கான கொள்முதல் பருவம் 2017 - 2018-ல் மத்திய அரசு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1590/-ம், பொது ரகத்திற்கு ரூ.1550/-ம் நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.70/-ம், பொது ரகத்திற்கு ரூ.50/-ம் கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1660/- மற்றும் பொது ரகத்திற்கு ரூ.1600/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வேளாண் பெருமக்களுக்கு தேவைப்படின் கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எனவே, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விலைக்கே நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியும். தமிழக முதல்வர் அறிவித்த இந்த அறிக்கை விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.