புதுடெல்லி: 474 கணக்கு பற்றிய தகவல்களை வழங்குமாறு மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை இந்திய அரசு கேட்டுள்ளது. இதனுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 504 கணக்குகளை மூடவோ அல்லது சட்ட விரோத கருத்துக்களை அகற்றவோ அரசாங்கம் கோரியுள்ளது. ட்விட்டரின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப இதுவரை ஐந்து சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மொத்தம் ஆறு சதவீத கணக்குகளை அகற்றி உள்ளோம் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்திய அரசு சார்பில், மொத்தம் 1,268 ட்விட்டர் கணக்குகள் குறித்து தகவல்களை அளிக்க வேண்டும் என்றும், அதேபோல 2,484 ட்விட்டர் கணக்குகளை அகற்ற வேண்டும் என்றும் Twitter நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூலை முதல் டிசம்பர் 2018 வரையிலான காலகட்டத்தில் 422 ட்விட்டர் கணக்குகளுக்கான தகவல்களை இந்திய அரசு கோரியது. சட்டத்தை மீறியதற்காக மைக்ரோ பிளாக்கிங் தளத்திலிருந்து 667 கணக்குகளை நீக்குமாறு சட்ட நடைமுறைப் படுத்தல் (Law enforcement) துறை முறையிட்டன.
இந்த முறை அமெரிக்க அரசாங்கம் ட்விட்டர் கணக்கு பற்றிய தகவல்களைக் கோருவதில் முன்னணியில் இருந்தது. மறுஆய்வு காலத்தில், உலகளாவிய கோரிக்கைகள் குறித்த தகவல்களுக்காக அமெரிக்கா மொத்தம் 29 சதவீத கோரிக்கைகளை விடுத்தது.
"முந்தைய காலத்தை விட 119 சதவீதம் அதிகமான கணக்குகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான மீறல்களுக்காக மொத்தம் இரண்டு லட்சம் 44 ஆயிரம் 188 கணக்குகளை ட்விட்டர் தடை செய்துள்ளது.