மகாராஷ்டிரா முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், வியாழன் அன்று இரவு பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி இந்து தலைவர் சம்பாஜி பிதேயின் உதவியை நாடியுள்ளது. அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' இல்லத்தில் சந்திக்க அனுப்பியுள்ளது.
இருப்பினும், பிதே வரும்போது தாக்கரே வீட்டில் இல்லாததால் இச்சந்திப்பு நிகவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிதேவின் வருகையை சிவசேனா எதிர்பார்க்கவில்லை என்றும், எனவே தாக்கரே அவரை சந்திக்க இயலவில்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
85 வயதான பிதே மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் தேவேந்திர ஃபடனவிஸின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது. அவர் முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் (RSS) தொடர்பு கொண்டிருந்தார், பின்னர் தனது சொந்த அமைப்பான சிவ் பிரதிஷ்டான் இந்துஸ்தானை உருவாக்கினார்.
மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜகவும் சிவசேனாவும் கடுமையான அதிகார மோதலில் ஈடுப்பட்டு வருகின்றன. சிவசேனா 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளது, அதன்படி இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முதலமைச்சரைக் கொண்டிருக்க வேண்டும் என சிவசேனா நிர்பந்திக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிராவின் தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 50:50 சூத்திரத்தை கைவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக நியமிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது.
சச்சரவுக்கு மத்தியில், பாஜகவும், சிவசேனாவும் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோரலுக்கு வெளிப்புற ஆதரவை எதிர்பார்த்து வருகின்றன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வியாயன் அன்று, ஒரு பாஜக தூதுக்குழு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்து, அரசாங்கத்தை உருவாக்குவதை தாமதப்படுத்துவதற்கான சட்டரீதியான விருப்பங்கள் குறித்து விவாதித்தது, அதே நேரத்தில் சிவசேனா புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA-க்களை மும்பையில் உள்ள ஒரு விடுதிக்கு மாற்றி பத்தரப்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களை வென்றதன் மூலம் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. எவ்வாறாயினும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், பாஜக-வால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியவில்லை. இதற்கிடையில், சிவசேனாவுக்கு 56 இடங்கள் கொண்டு, மாநிலத்தில் அதிகார பகிர்வுக்கு காத்திருக்கிறது. இருகட்சிகளுக்கு இடையே நீடிக்கும் ஒப்பந்த இழுபறி, மாநிலத்தில் சட்டமன்றம் அமைப்பதற்கு காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது.