ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரமாக பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஆதார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கல்லூரி, பல்கலை. கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி கல்லூரி, பல்கலை. மற்றும் மத்திய பல்கலை. பேராசிரியர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்திருந்தனர்.
ஆதார் அடிப்படையில் இவர்களின் விவரங்களை உயர்கல்வித்துறை அகில இந்திய அளவில் சர்வே செய்து 2016-17- ம்ஆண்டிற்கான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்மூலம் நாடு முழுவதும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரமாக 80 ஆயிரம் பேர் பணியாற்றி வந்த அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் கூறியதாவது; ஆதார் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து பல்வேறு கல்லூரிகளில் முறைகோடு செய்து முழு நேர பேராசிரியராக பணியாற்றியுள்ளனர்.ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் மூலம், இதுபோன்று பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை. ஆனால் சில மாநில பல்கலைக்கழகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.முறைகேடாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர்,அனைத்து பல்கலைக்கழகங்களும் முறைகேடுகளை தடுக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்வது செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் பரிமாறிக்கொள்வது போன்றது. செல்லிடப்பேசி எண்ணை பரிமாறிக் கொள்வதால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடிவிட முடியாது. அதுபோலதான் ஆதாரும் செயல்படுகிறது.