ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலங்களின் முதல் அமைச்சர் யார் என்பதைக் குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று(டிசம்பர் 13) டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் ராகுல் காந்தி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதலமைச்சரின் பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரின் பெயர் 4 மணியளவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் மாலை நான்கு மணிக்கு காங்கிரஸ் தரப்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று அறிவிக்கவில்லை. தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இந்தநிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் அசோக் கெலாட் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Sources: Ashok Gehlot to be the next Chief Minister of Rajasthan. #RajasthanAssemblyelection2018 pic.twitter.com/ZAfDJ6QdMD
— ANI (@ANI) December 14, 2018
முன்னதாக, 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. 199 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. இறுதியாக காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜகா 73 இடங்களிலும், பிஎஸ்பி 6 இடங்களிலும், மற்றவர்கள் 21 இடங்களில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.