புவனேஸ்வர்: புல்புல் சூறாவளி (Cyclone Bulbul) அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மேற்கு வங்காளம் (West Bengal) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh) நாட்டின் கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் (Odisha) கடலோரப் பகுதிகளில் அதிக அழிவைத் தொடங்கியுள்ளது. இந்த கடுமையான புயலின் தாக்கத்தால், சனிக்கிழமை கடலோர மாவட்டங்களில் பலத்த மழையுடன் சேர்ந்து வேகமான காற்றும் வீசியது. இந்த சூறாவளி புயலால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. அதே நேரத்தில் என்.டி.ஆர்.எஃப் குழு, ஓ.டி.ஆர்.ஏ.எஃப் குழு, போலீஸ் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து பிரச்சனையை சீராக்க முடியும்.
சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்.ஆர்.சி) பிரதீப் ஜீனா கூறுகையில்,, கேந்திர பாரா, ஜகத்சிங் பூர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் மரங்களை அதிக அளவில் சாய்ந்துள்ளது என தகவல் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தற்போது வரை இந்த "புல்புல்" சூறாவளி மூலம் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.
பத்ரக் மாவட்டத்தின் தம்ரா பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசியுள்ளது என பதிவாகியுள்ளதாக எஸ்.ஆர்.சி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கேந்திர பாதா மாவட்டத்தில் இருந்து 1070 பேரை ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேற்றி வெவ்வேறு பாதுகாப்பான முகாம்களுக்கு கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதேபோல பாலசூர் மற்றும் ஜகத்சிங்க்பூர் மாவட்டங்களில் 1500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், பரதீப்பில் 159 மில்லி மீட்டர் அளவில் அதிக மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், சந்த்பாலியில் 143 மி.மீ மழையும், பாலசூரில் 32 மி.மீ. மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கருத்துப்படி, புல்புல் என்ற கடுமையான சூறாவளி புயல், ஒடிசாவின் பாரதீப்பிலிருந்து 98 கிமீ கிழக்கு மற்றும் வடகிழக்கில் நிலைக் கொண்டுள்ளதாகவும், அதேபோல பாலசூருக்கு 135 கிமீ தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது எனக் அறிவிக்கப்பட்டு உள்ளது.