விமானப்படை தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்!!
பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அறிவித்திருக்கிறார். இந்தியாவின் பதிலடி தாக்குதலை, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே(Vijay Gokhale) உறுதிப்படுத்தியுள்ளார்.
பாலகோட்டில், (Balakot) ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் என்கிற உஸ்தாத் காவ்ரீ,(Maulana Yusuf Azhar @ Ustad Ghauri) பாலகோட் முகாமிற்கு தலைமையேற்றிருந்ததாகவும் விஜய் கோகலே கூறியுள்ளார். இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல், பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன், மிகச்சரியாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
பாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம், அடர்ந்த வனப்பகுதி சூழ்ந்த மலையுச்சியில் இயங்கி வந்ததாகவும், அதன் அருகில், பொதுமக்களின் வசிப்பிடங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தியதாகவும், வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், பாகிஸ்தான் மண்ணிலிருந்து திட்டமிடப்படுவதாகவும், இதுகுறித்த, ஆதாரங்களை தொடர்ந்து கொடுத்த போதும், அவற்றின் மீது, பாகிஸ்தான் அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத நிலையிலேயே, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று அதிகாலை பால கோட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தளபதிகள், தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
புல்வாமாவைத் தொடர்ந்து, இந்தியாவில் மேலும் பல தாக்குதல்களை முன்னெடுக்க ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறைக்கு கிடைத்த உறுதியான தகவல்கள் கிடைத்தாக அவர் கூறியுள்ளார்.
#WATCH Foreign Secy says,"This facility in Balakot was headed by Maulana Yusuf Azhar alias Ustad Ghauri, brother in law of JeM Chief Masood Azhar...The selection of the target was also conditioned by our desire to avoid civilian casualty. It's located in deep forest on a hilltop" pic.twitter.com/QENnnkU5Rh
— ANI (@ANI) February 26, 2019
இதையடுத்தே, இந்திய மண்ணில் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற வகையிலும், முன்கூட்டியே தடுக்கும் விதமாகவும், இன்றைய அதிகாலை தாக்குதலை, இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக முன்னெடுத்ததாகவும் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.