புல்வாமா தாக்குதலை அடுத்து காஷ்மீரை காக்க போராடுவதாகவும், காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு காஷ்மீர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் காஷ்மீருக்காக தான் போராடுகிறோமே தவிர காஷ்மீருக்கு எதிராக அல்ல எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் புல்வாமா தாக்குதலை முன்வைத்து பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தேறின.
இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மிருக்கும் திரும்பினார்கள். இந்த சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலையும் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது இத்தாக்குல் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது... “தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காக தான் போராடுகிறோம். காஷ்மீருக்காக அல்ல. காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல.” என தெரிவித்தார்.