இந்தியா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் காசியாபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகள் பதற்ற நிலைக்கு ஆளாகியிருப்பதாக கூறினார். ஜம்முவில் பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் குண்டு வீசிய சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், தீவிரவாதிகளின் பதற்றமான மனநிலையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார். தமது தலைமையிலான அரசு எடுத்து வரும் உறுதியான நடவடிக்கைகளை விளக்கிய மோடி தீவிரவாதிகளிடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரி மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்பது குறித்து அச்சம் தெரிவித்த பிரதமர், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் மீது உலக நாடுகள் ஒரே குரலில் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் சில தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக கூறினார்.
முன்னதாக கான்புரில் லக்னோ மெட்ரோ ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் வளாக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.