பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆம் மைசூர் என்று பல பெயர்களில் செயல்படும் வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 80 ஆயிரம் வங்கிகளில் பணியாற்றும் சுமார் 10 லட்சம் ஊழியர்களும், சில தனியார் வங்கிகள் உட்பட இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 500 வங்கிகளில் 70 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வங்கி மேலாளர்களும் போராட்டத்தில் குதித்ததால் வங்கிகள் மூடப்பட்டன. உயர் அதிகாரிகள் மட்டும் பணியில் இருந்தனர். வங்கிகள் திறக்கப் படாததால் வங்கிப்பணிகள் அனைத்தும் முடங்கியது.
வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். வங்கி ஸ்டிரைக் என்பதை அறிந்து நேற்று இரவு ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்தனர். இதனால் பல ஏ.டி.எம் களில் பணம் காலியாகிவிட்டது. இன்று பணம் எடுக்க முடியாமல் பலர் தவித்தனர்.