வரும் மக்களவை தேர்தலில் குளறுபடிகள் நிகழாமல் இருக்க 5 மின்னனு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
அதாவது ஒரு தொகுதிக்கு 5 மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாக ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் மட்டும் ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. குறைந்தபட்சம் 50 % வாக்குகளையாவது ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகளின் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் 50% வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்றால் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடுதலாக 6 நாட்கள் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கும் மீண்டும் உச்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்றுக்குப் பதில் 5 மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவிட்டனர். அதிக எண்ணிக்கையில் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் போது திருப்தியும் அதிகரிக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, ஏழைகளுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.