மேற்குவங்கத்தில் நடைப்பெற்ற அமித் ஷா பிரச்சார பேரணியின் போது பாஜக - திரினாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.!
மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளும் மிக பிரமாண்டமான பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமித் ஷா-வின் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். மேலும் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில பாஜக-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் அறிவித்திருந்தனர்.
West Bengal: Latest visuals from BJP President Amit Shah's roadshow in Kolkata after clashes broke out. pic.twitter.com/KvS7wlwRky
— ANI (@ANI) May 14, 2019
இந்நிலையில் இன்று எதிர்ப்புகளையும் மீறி அமித்ஷா பிரச்சார பேரணியை மேற்கொண்டார். பேரணிக்கு முன்னாக குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டு இருந்து அமித் ஷா படம் பதித்த பதாகைகள் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அமித் ஷா பேரணிக்கு திரினாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடிகளும் காட்டப்பட்டது.
இதனையடுத்து திரிணமுல் ஆதரவாளர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு உண்டானது. திரிணமுல் தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.