கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ. 355 கோடி செலவில் சுமார் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்!!
பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் பொருட்டு, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிற நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசுவதுடன், நாட்டின் வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகிறார்.
ஆனால் பிரதமரின் சுற்றுப்பயணத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம்உள்ளன. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பீமப்பா கதாத் என்பவர் பிரதமரின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணம், அவரின் பாதுகாப்புக்கு ஆகும் மொத்த செலவுகள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருக்கு அளித்துள்ள பதிலின் அடிப்படையில், பிரதமர் மோடி பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் 41 முறையென மொத்தம் 52 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இதில் அதிகபட்ச தொகையாக கடந்த 2015, ஏப்ரல் 9 முதல் 15 வரை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றது தான் என கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு 31.25 கோடி செலவாகியுள்ளது.
குறைந்தபட்ச தொகையாக 2014ம் ஆண்டு ஜூன் 15, 16-ல் பூட்டான் சென்றது. இதற்கு ரூ.2.45 கோடி செலவாகியுள்ளது. மேலும், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான செலவுகள் குறித்து பகிரப்படவில்லை. அதேபோன்று பிரதமர் மோடியின் உள்நாட்டுப்பயணம் மற்றும் அவரது பாதுகாப்புக்கான செலவு ஆகியவை குறித்தும் வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.