பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார்

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 31, 2023, 11:38 AM IST
  • நடிகர் லியோ பிரபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தமிழ் சினிமாவில், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் லியோ பிரபு.
  • தமிழக அரசு லியோ பிரபுவுக்கு கடந்த 1990ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கியது.
பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார் title=

தமிழ் சினிமாவில், சிறந்த எழுத்தாளர், மேடை நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முக திறமை படைத்தவர் லியோ பிரபு. 1933 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில்பிறந்த இவர், பள்ளி நாட்களிலே சினிமா மற்றும் நாடகம் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். பழம் பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்ந்து, நடிப்பு கலையை பயின்றார். 

லிட்டில் ஸ்டேஜ் நாடக குழு, அப்போது ஏவிஎம் ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு போன்றவர்களை நடிக்க வைத்து நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. லியோ பிரபு இந்த நாடக குழுக்களில் சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். பின்னர் சேஷாத்ரியின் சாந்தி நிகேதனில் சேர்ந்து சத்திய சோதனை நாடகத்தில் நடித்தார். மேடையில் அவரது நடிப்பு திறமையை கண்ட ஒய் ஜி பார்த்தசாரதி, தமது யுனைடெட் அமைச்சூர் ஆர்டிஸ்ட் குழுவில் வந்து சேர்ந்து கொள்ளும்படி இவரை அழைத்தார்.

மேலும் படிக்க | தெலுங்கிற்கு ஒரு பாகுபலி! தமிழுக்கு ஒரு அயலான் - தயாரிப்பாளர் ராஜேஷ் பேச்சு!

நாடகங்களில் நடித்து வந்ததோடு கூடவே நாடகங்களை எழுதி தயாரித்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இவரிடம் உருவாக ஆரம்பித்தது. அதற்கு வசதியாக தனியே நாடகக்குழுவை ஆரம்பித்து நடத்தினால் தான் முடியும் என்ற எண்ணத்திற்கு வந்த லியோ பிரபு, ஸ்டேஜ் இமேஜ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். புரட்சியும் புதுமையும் கொண்ட தனது நாடகங்களை அதன் மூலம் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். 13 நாடகங்களை சொந்தமாக எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கவும் செய்திருக்கிறார் லியோ பிரபு.

மேலும் நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் பாலன் கே நாயரின், ஈநாடு படத்தில் ஏற்று நடித்த வேடத்தில், தமிழில் இது எங்க நாடு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் ராமநாராயணன், அப்போது லியோ பிரபு புது முகமாக இருந்த போதிலும் இது எங்க நாடு படத்தின் டைட்டில் கார்டில் இவர் பெயருக்காக மட்டுமே தனியாக ஒரு டைட்டில் கார்டை திரையில் காண்பித்தாராம்.

தமிழ் நாடகத் துறைக்கு இவரின் பங்களிப்பானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் மிகச்சிறந்த நடிகர், எழுத்தாளர் மற்றும் பல்துறை நாடக கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும் 1990 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு தமிழக அரசின் மிக உயர்ந்த மாநில விருதான கலை மாமணி விருதை வழங்கியது. மேடை நாடகம், எழுத்து, திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரு லியோ பிரபு அவர்கள் சிறந்த ஊடகவியலாளராகவும், புனைவு எழுத்தாளராகவும், புதினங்கள் மற்றும் நாவல் ஆசிரியர் ஆகவும் அறியப்பட்டவர். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் இயக்கவும் செய்திருக்கிறார்.

வயது மூப்பு காரணமாக தன்னுடைய மனைவி உஷா, மகள் முருகசங்கரி ஆகியோருடன் மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, தன்னுடைய 90-ஆவது வயதில், நேற்று மாலை 4 மணி அளவில் காலமானார். இவரது மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News