Health Tips In Tamil: நீங்கள் தினமும் போதுமான நேரத்திற்கு சரியாக தூங்கவில்லை என்றால், அது உடலின் ரத்த சர்க்கரை அளவை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது இங்கு விரிவாக காணலாம்.
தூக்கம் என்பது மனநிலையை சீராக்க மட்டுமின்றி உடல்நிலையையும் சீராக வைத்திருப்பதற்கு அடிப்படையான ஒன்று. காலையில் எப்படி சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்கிறீர்களோ அதேபோல், இரவும் சரியான நேரத்திற்கு படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாறாக சரியாக தூங்காதபட்சத்தில் உடல்நிலை மோசமடையும் வாய்ப்புகள் அதிகம்.
சிறுவர்களுக்கு குறைந்தது 8-9 மணிநேர தூக்கம் (Sleep) அவசியம். அதேபோன்று வயது வந்தோருக்கு 6-8 மணிநேரம் தூக்கம் அதுவும் இரவில் அசந்த நிலையில் தூங்குவது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.
நன்றாக தூங்கினால் உடல் அதன் இன்சுலினை சிறந்த முறையில் பயன்படுத்தும். இதனால், உடலில் இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) என்ற ஆபத்து குறையும்
நல்ல தூக்கம் என்பது உடல் ரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) சீராக வைத்திருக்க உதவும். அதாவது, நீங்கள் நன்றாக தூங்கி எழுந்திருக்கும்பட்சத்தில் அன்றைய நாள் முழுவதும் ரத்த சர்க்கரை அளவை உடல் சீராக வைத்திருக்கும்.
மாறாக குறைவான நேரம் தூங்கினாலோ, அடிக்கடி விழிப்பு வந்து சரியாக தூங்கவில்லை என்றாலோ ரத்த சர்க்கரை அளவு உயரும். காரணம் உங்களின் உடல் குளுக்கோஸை செயலாக்கம் செய்ய திணறும்.
குறைந்த நேரம் தூங்கினால், கார்டிசால் (Cortisol) மற்றும் கிரெலின் (Ghrelin) ஆகிய ஹார்மோன்களுக்கு இடையூறு விளைவிக்கும். இதனால் கொடூரமான பசி எடுக்கும், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட அதிகம் தூண்டும். நாள்பட்ட தூக்கமின்மை இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) நோயை உருவாக்கும் ஆபத்து அதிகம்.
சீரற்ற தூக்கம் இரவில் ரத்த சர்க்கரை அளவில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இது உடலின் ஒட்டுமொத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை பாதிக்கும் வகையில் அமைகிறது.
எனவே, இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க ஆழ்ந்த மற்றும் நீண்டநேர தூக்கத்தை கடைபிடியுங்கள். முடிந்தளவிற்கு இரவில் விரைவாக படுக்கைக்கு செல்லுங்கள்.
பொறுப்பு துறப்பு: இதனை வாசித்த வாசகர்களுக்கு நன்றி. இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து, வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. எனினும், இதனை பின்பற்றும் முன்னர் நீங்கள் நிச்சயம் மருத்துவரை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இந்த தகவல்களுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.