விநாயகர் சதுர்த்தி வேளையில் நாம் பலவித விநாயகர்களை பார்ப்பது வழக்கம். பாடும் விநாயகர், நடனமாடும் விநாயகர், வண்டி ஓட்டும் விநாயகர், கம்ப்யூட்டரில் பணிபுரியும் விநாயகர் என விநாயகர் செய்யாத வேலைகளே கிடையாது. அவ்வகையில் இந்த கிரிக்கெட் ஆடும் விநாயகரும் மிகவும் புகழ் பெற்றவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சென்னையின் பல அடையாளங்களில் இந்த கிரிக்கெட் விநாயகர் கோயிலும் ஒன்று. சென்னை மக்களுக்கு மிகவும் பிடித்த பிள்ளையாரையும் கிரிக்கெட் விளையாட்டையும் ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட கோயில் பலருக்கு பிடித்த கோயிலாக இருக்கிறது.
இந்த கோயிலுக்குப் பின்னால் ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி உள்ளது… ஒரு பக்தரின் வேண்டுகோள் உள்ளது.
தீவிர விநாயகர் பக்தராகவும் கிரிக்கெட் ரசிகராகவும் இருக்கும் ஒருவர் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் அமைக்கும் விநாயகர் கோயிலுக்கு கிரிக்கெட் விநாயகர் என பெயர் வைப்பதாக வேண்டிக்கொண்டார்.
விநாயகர் வேண்டுதலுக்கு செவி சாய்த்தார். விநாயகர் கோயில் கிரிகெட் விநாயகர் கோயிலானது.
அண்ணாநகரில் உள்ள கெ.ஆர். ராமகிருஷ்ணன் என்பவர்தான் பாளயத்தம்மன் கோயிலில் கிரிக்கெட் விநாயகர் கோயிலை அமைத்தார்.
விநாயகரையும் கிரிகெட் விளையாட்டையும் ராம்கிருஷ்ணன் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் விநாயகருக்காக 108 போற்றி துதி மந்திரங்களையும் எழுதி வைத்து பூஜை செய்கிறார் ராமகிருஷ்ணன்.