Chennai Metro : இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் டிரைவரே இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில்
Chennai Metro Latest News Tamil : டிரைவரே இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில் பெட்டிகள் சென்னைக்கு வந்துள்ளன. பிரெஞ்சு நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரித்து அனுப்பியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இதில் டிரைவரே இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதற்காக பிரெஞ்சு மல்டி நேஷ்னல் ஆல்ஸ்டாம் நிறுவனம் இந்த திட்டத்திற்கு முதல் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டியை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஒவ்வொன்றும் மூன்று கார்கள் கொண்ட 36 ரயில்களை தயாரிப்பதற்கான ஆர்டர்களை அல்ஸ்டோம் பெற்றுள்ளது. இந்த ரயில்கள் 26 கிமீ பாதையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லி பைபாஸை - லைட் ஹவுஸுடன் இணைக்கும் வகையில் உருவாகும் சென்னை மெட்ரோ கட்டம்-II திட்டத்துக்காக இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
28 மெட்ரோ ரயில் நிலையங்கள் வழியாக டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ ரயில் பயணிக்கும். 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் ஒரு பகுதியாக அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீ சிட்டியில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மதிப்பு யூரோ 124 மில்லியன் ஆகும்.
இந்த ரயில்களை இயக்குவதற்கு சென்னை மெட்ரோ பணியாளர்களுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சென்னை பயணிகளுக்கு திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வசதியான தீர்வை வழங்கும் என்று ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ திறமையான மற்றும் நம்பகமான போக்குவரத்தின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை உயர்த்துவது மட்டுமின்றி, சாலை நெரிசலைக் குறைக்கும் என்று Alstom India நிர்வாக இயக்குநர் Olivier Loison கூறினார்.
2010 ஆம் ஆண்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்காக 208 மெட்ரோ கார்களை ஆல்ஸ்டாம் வழங்கியது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் ரயில் பெட்டியை இப்போது வழங்கியுள்ளது.