பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா முதல் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா வரை பிரதமர் பெயரில் இருக்கும் முக்கிய திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) மற்றும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) ஆகியவை மத்திய அரசு செயல்படுத்தும் மிக முக்கிய திட்டங்களாகும்.
பொதுமக்கள் நேரடியாக பலன்கள் கிடைக்கும் நான்கு முக்கிய திட்டங்களை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இவை சாலை விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் வழங்குதல், வங்கி சேவைகள், கடன் வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றன. எந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) | பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டுத் திட்டம் விபத்து காரணமாக மரணம் அல்லது உடல் செயலிழப்புக்கு காப்பீடு வழங்குகிறது. வருடாந்திர பிரீமியம் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதும். வங்கி அல்லது தபால் நிலையக் கணக்கிலிருந்து 'ஆட்டோமேடிக் டிடெக்ஷன்' வசதி மூலம் கழிக்கப்படும்.
PMSBY திட்டத்தின் கீழ் காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை வருடாந்திர பிரீமியம் கவர் ஆகும். அதாவது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உறுப்பினர் 70 வயதை அடையும் போது விபத்து காப்பீடு நிறுத்தப்படும். ஒருவேளை வங்கிக் கணக்கு மூடப்படும்போது அல்லது போதுமான இருப்பு இல்லாதபோது காப்பீடும் ரத்தாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) | பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. இந்தத் திட்டம் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுடன் இணைந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களால் இந்த திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.
PMJJBY ரூ.2 லட்சத்திற்கான ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது, மேலும் இது எந்த காரணத்திற்காகவும் இறந்தாலும் இந்த காப்பீடு மூலம் நிவாரணம் பெற முடியும். ஆண்டுக்கு ரூ.436 மட்டும் ப்ரீமியமாக செலுத்தினால் போதும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) | பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் ஆகஸ்ட் 2014 இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு அடிப்படை வங்கிக் கணக்குடன் வங்கி வசதிகளை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி கல்வியறிவு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை இந்த திட்டம் வழங்குகிறது. வங்கி கணக்கு இல்லாத ஒவ்வொரு இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வங்கி கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் ரூபே அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) | பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது சிறு குறு நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்த ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளும் திட்டமாகும். தொழில் செய்பவர்கள் எல்லோரும் மத்திய அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழியாகவும் முத்ரா கடன் பெற்றுக் கொள்ள முடியும். ரூ.50,000 வரையிலான கடன்களுக்கான செயலாக்கக் கட்டணங்கள் இல்லை.