உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவு முறையுடன், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா தேவை. ஆனால் இந்த பிசியான வாழ்க்கையில் சிலருக்கு உடற்பயிற்சி யோகா போன்றவற்றிற்காக நேரம் இருக்க முடியாத நிலை உள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையில் கடின உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. இதனால் உடல் பருமன், நீரிழிவு, கொலஸ்ட்ரால் இவை பொதுவான பிரச்சனைகளாக ஆகிவிட்டது.
நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். அந்த வகையில் துரிததியிலான வாழ்க்கையில், பயிற்சி செய்ய நேரமில்லை என்று வருந்த வேண்டாம். தினமும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டாலே போதும். பல நோய்களுக்கு குட் நைட் சொல்லி விடலாம்.
இதயம் ஆரோக்கியம்: தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு இதய நோய்கள், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் பெரிதளவு குறையும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமும் இதனால் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.
நுரையீரல் ஆரோக்கியம்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், நுரையீரல் செயல்பாடும் மேம்படும். நுரையீரலுக்கான ரத்த ஓட்டம் மேம்பட்டு, சுவாச கோளாறுகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி: படிக்கட்டிகளில் ஏறி இறங்குவதால் உடல் வலிமை மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மன வலிமையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே மன அழுத்தமும் பதற்றமும் குறைய தினமும் படி ஏறுவதும் இறங்குவதும் நல்லது.
எலும்பு ஆரோக்கியம்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது தசைகளியும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. எலும்பு அடர்த்தி அதிகரிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிதல் நோய் வருவது தடுக்கப்படும். வலுவான எலும்பு காரணமாக மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் அடையலாம்.
உடல் பருமன்: தினமும் படிகட்டுகளில் ஏறி இறங்குவதால், நடப்பதை விட அதிக கலோரிகள் எரிக்கப்படும். இதனால் உடல் எடை வேகமாக குறைவதால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும்.
படியேறி இறங்குதல்: ஆரோக்கியமான வாழ்விற்கு, லிப்ட் எஸ்கலேட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல், படி ஏறி இறங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால், நோயற்ற வாழ்வை வாழலாம். உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர்களுக்கு, இந்த முறையை கடைபிடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.