கூகிளின் பிளே ஸ்டோர் செயலியானது (Play store app) மொபைல் அம்சங்களுக்கிடையில் ஒப்பிட்டுப் பார்க்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தில் (Mobile apps) பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் பிளே ஸ்டோரில், செயலிகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்த செயலியை தேர்ந்தெடுக்கும் வசதியை ஏற்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டிராய்ட் பிளே ஸ்டோரில், தற்போதைய நிலவரப்படி, ஒரு செயலியின் பக்கத்தில் முடிவில் அதேப்போன்ற மற்ற செயலிகள் காண கிடைக்கிறது.
அதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து நாமாகவே தான் ஒப்பிட்டு பார்த்து எந்த செயலியை பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த முடிவுக்கு வர வேண்டும். இந்நிலையில் பிளே ஸ்டோரில் செயலிகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்த செயலியை தேர்வு செய்து அதை பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், சிறந்த செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஒரு வாய்ப்பு அமைவதுடன், சிறந்த செயலிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிளே ஸ்டோரில் பக்கவாட்டின் ஸ்குரோல் செய்யும் முறையில் இந்த வசதி அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் இரு செயலிகளை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும் வசதி அமைக்கப்படாமல், பல செயலிகளை ஒரே நேரத்தில் ஒப்பிட்டு பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் ஆண்டிராய்ட் போலீஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை அளிக்கும் வகையில் மால்வேர் மற்றும் டேட்டா திருடும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி வரும் கூகுள் நிறுவனம், சிறந்த செயலிகளை கண்டறிந்து பயன்படுத்துவதற்கு ஏற்ப பல புதிய வசதிகளையும் ஏற்படுத்த முனைப்பு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.