டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?

T20 World Cup 2024 Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி அந்த போட்டிகளை எங்கு, எப்படி காண்பது என்பதை இங்கு காணலாம். 

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சாம்பியன் அணிகள் இடம்பெறவில்லை. நியூசிலாந்தும் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. 

 

 

1 /8

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் இந்திய நேரப்படி ஜூன் 2ஆம் தேதி அன்று தொடங்கியது. அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றின் சில போட்டிகள் மட்டுமே அமெரிக்காவில் நடைபெற்றன. மீதம் உள்ள குரூப் போட்டிகளும், சூப்பர் 8 சுற்று போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் முழுவதும் கரீபியன் தீவுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.  

2 /8

குரூப் சுற்றின் முடிவில் சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வாகிய 8 அணிகளும் தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் பிரிவிலும்; தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா ஆகிய அணிகள் இரண்டாம் பிரிவிலும் இடம்பெற்றிருந்தன.  

3 /8

சூப்பர் 8 சுற்றின் முடிவில் முதல் பிரிவில் முறையே இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இரண்டாம் பிரிவில் முறையே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு வந்துள்ளன.   

4 /8

இதன்மூலம், முதல் பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா, இரண்டாம் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்கிறது. அதன்படி, இரண்டாம் பிரிவில் முதலிடத்தை பிடித்த தென்னாப்பிரிக்காவும், முதல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ஆப்கானிஸ்தானும் அரையிறுதியில் மோதுகின்றன.   

5 /8

இருப்பினும், முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளே மோதுகின்றன. இந்த போட்டி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் சான் பெர்னாண்டோ நகரில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி ஜூன் 26ஆம் தேதி (இன்று) இரவு 8.30 மணிக்கு அங்கு போட்டி தொடங்கும். ஆனால் இந்திய நேரப்படி இப்போட்டி ஜூன் 27ஆம் தேதி (நாளை) காலை 6 மணிக்கு தொடங்கும்.   

6 /8

மறுபுறம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கயானா நாட்டின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றால் இந்த மைதானத்திலேயே விளையாடும் என தொடர் தொடங்குவதற்கு முன்னரே இறுதிசெய்யப்பட்டுவிட்டது.   

7 /8

மேலும் இந்தியா மோதும் போட்டியை இந்திய ரசிகர்கள் பெரும்பாலானோர் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போட்டி இந்திய நேரப்படி இரவில் நடைபெறும். அதாவது, இந்த போட்டி கயானா உள்ளூர் நேரப்படி ஜூன் 27ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு நடைபெறும். ஆனால், இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.   

8 /8

இந்த இரண்டு போட்டிகளையும் இந்தியாவில் நேரலையில் காணலாம். தொலைக்காட்சி சேனலில் பார்க்க ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சந்தா செலுத்த வேண்டும். அதில் நேரலையில் பல மொழிகளின் வர்ணனையுடன் நீங்கள் கண்டுகளிக்கலாம். அதேநேரத்தில், ஓடிடி என்றால் ஹாட்ஸ்டார் தளத்தில் நீங்கள் பல மொழிகளின் வர்ணனையுடன் காணலாம். குறிப்பாக மொபைலில் காண்பதற்கு மட்டுமே இலவசமாகும். ஹாட்ஸ்டாரில் நீங்கள் லேப்டாப், கணினி, தொலைக்காட்சியில் பார்த்தால் சந்தா கட்டாயம் தேவை.