Naga Chaitanya Marriage: நயன்தாராவின் திருமணத்தை விட நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் (Netflix) அதிக தொகையை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் டிசம்பர் 4ஆம் தேதி அன்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடிக்கு திருமணம் (Naga Chaitanya Sobhita Dhulipala Marriage) நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பல்வேறு திரையுலகை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
பிரபலங்களில் திருமணங்கள் தற்போது பெரும் வணிகம் ஆகிவிட்டது எனலாம். அதாவது, பிரபலங்களின் திருமணத்தை முழுவதுமாக படப்பிடிப்பு செய்து அதனை ஓடிடியில் ஆவணப்படமாக அல்லது ஒரு தொடராக வெளியிடும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்துவிட்டது.
நயன்தாரா (Nayanthara) மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களின் திருமண நிகழ்வை ஆவணப்படமாக பதிவு செய்ய நெட்பிளிக்ஸ் தளத்திற்கு அனுமதி வழங்கினர். Nayanthara: Beyond the Fairy Tale என்ற அந்த ஆவணப்படத்திற்காக, நெட்பிளிக்ஸ் நிறுவனம் அந்த ஜோடிக்கு ஒளிப்பரப்பு உரிமத்தொகையாக ரூ.25 கோடி வரை வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல், 2022ஆம் ஆண்டு நடிகை ஹன்சிகாவும் (Actress Hansika) அவரது திருமணத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு தொடராக வெளியிட அனுமதி அளித்தார். ஹன்சிகாவின் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் Hansika's Love Shaadi Drama என்ற பெயரில் 6 எபிசோட்களாக வெளியானது. இதற்கு அந்நிறுவனம் பெரிய தொகையை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதிகளும் தங்களது திருமண நிகழ்வை ஒட்டுமொத்தமாக படப்பிடிப்பு செய்து, அதை ஓடிடியில் வெளியிட பிரபல நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகளில் இருவருக்கும் இடையே விவகாரத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.
விவாகரத்திற்கு பின்னர் நாக சைதன்யா (Naga Chaitanya), பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை (Sobhita Dhulipala) காதலிப்பதாக தகவல்கள் பரவினாலும் அவர்கள் அதுகுறித்து பேசாமல் இருந்தனர். பல்வேறு புகைப்படங்கள் லீக் ஆனாலும் அவர்கள் அமைதி காத்தனர். இருப்பினும் சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொதுவெளியில் அறிவித்தனர்.
இதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த தம்பதிக்கு மிக எளிமையாக நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. இருப்பினும், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த திருமணத்தில் தெலுங்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகை சேர்ந்தவர்களும் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஆகியோருக்கு வரும் டிச. 4ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் (Naga Chaitanya Sobhita Dhulipala Marriage) ஹைதராபாத் நகரில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தை படப்பிடிப்பு செய்து, ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 கோடியை வழங்கி இந்த ஒளிப்பரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் (Netflix) கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது உறுதிசெய்யப்படவில்லை