15:12 25-04-2018
பேராசிரியை நிர்மலா தேவிக்கு சாத்தூர் நீதிமன்றத்தில் மே 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி காவல் 5நாள் முடிந்து நீதிமன்றத்தில் நிர்மலா தேவி இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வரும் 9 ஆம் தேதி வரை காவல் விதித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
13:50 25-04-2018
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீஸ் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது!
11:30 25-04-2018
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு உதவியதாகக் கூறி உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
கல்லூரி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வந்த முருகனை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்த நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கருப்பசாமி இன்று காலை சரண் அடைந்துள்ளார்.
தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து, இவர் தற்போது கைது செய்யப்பட்டு அவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நிர்மலாதேவியிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் நேற்று மதியம் உதவி பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சிபிசிஐடி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.