IPL 2025 Mega Auction: கிரிக்கெட் உலகே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவ. 24 மற்றும் நவ. 25 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் துறைமுக நகரமாக அறியப்படும் ஜெட்டாவில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு 10 அணிகள் சேர்ந்து மொத்தம் 46 வீரர்களை தக்கவைத்துள்ளன.
மொத்தம் ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் வரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கலாம். அந்த வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேவையான வீரர்களை எடுக்கும் பொருட்டு இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது. அப்படி பார்த்தால், தற்போதைய நிலையில் 10 அணிகள் சேர்ந்து 70 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 204 வீரர்களை இந்த மெகா ஏலத்தில் எடுக்கும். இந்த மெகா ஏலத்திற்கு ஒரு அணி 25 வீரர்களையும் எடுக்க ரூ.120 கோடி வரை செலவிடலாம்.
1,574 வீரர்கள் ஏலத்தில் பதிவு
204 வீரர்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் என மொத்தம் 1,574 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். தற்போது ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜாஸ் பட்லர், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் பலரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்குள் வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து 91 பேர் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | உறுதியானது ஐபிஎல் 2025 மெகா ஏல தேதிகள்! இந்த முறை கூடுதல் சிறப்பு! ஏன் தெரியுமா?
ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஏலத்தில் புது என்ட்ரி
இதில் பலரும் எதிர்பார்க்காத இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1.25 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார். 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 269 விக்கெட்டுகளையும், டி20ஐ கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சர்வதேச அரங்கில் மட்டும் 991 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவர் கடைசியாக 2014ஆம் ஆண்டில்தான் டி20 கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார். இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடியதில்லை.
காத்திருக்கும் இந்த 3 அணிகள்
இந்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக வலம் வருகிறார். இந்தச்சூழலில் அவர் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருப்பது பல அணிகளை அவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவார் எனும்பட்சத்தில் இந்த மூன்று அணிகள் அவரை நிச்சயம் இந்த ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராகுல் டிராவிட் தற்போது ஆர்ஆர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவியேற்றிருக்கிறார். சந்தீப் சர்மா புது பந்தில் நல்ல ஸ்விங் செய்வார். அவருக்கு பக்க துணையாக ஜேம்ஸ் ஆண்டர்சனை மெகா ஏலத்தில் ஆர்ஆர் (Rajasthan Royals) எடுக்க துடிக்கும். டெத் ஓவருக்கு கூட ஆண்டர்சனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நல்ல வேகப்பந்துவீச்சு படையை கட்டமைப்பதில் கேகேஆர் (Kolkata Knight Riders) எப்போதுமே சிரத்தையாக இருக்கும். சென்ற மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை சுமார் 24.75 கோடி ரூபாய்க்கு எடுத்து சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. அந்த வகையில் இம்முறை ஆண்டர்சனை எடுத்துவைத்துக்கொண்டால் ஈடன் கார்டன்ஸ் சூழலுக்கு நன்கு பொருந்திப் போகும். ஹர்ஷித் ராணா உடன் ஆண்டர்சனும் தொடக்க ஸ்பெல்லை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
35+ வீரர்களின் அடைக்கலமாக பார்க்கப்படும் சிஎஸ்கே (Chennai Super Kings) இந்த முறை ஆண்டர்சனையும் அந்த கோட்டாவில் எடுக்கலாம். தீபக் சஹாருக்கு கடந்த மெகா ஏலத்தில் 16 கோடி ரூபாய் வரை சென்ற சிஎஸ்கே அணி ஆண்டர்சனுக்கும் பல கோடி வரை போகலாம். பஞ்சாப், பெங்களூரு, மும்பை அணிகளும் கடுமையாக போட்டியிடலாம். இருப்பினும் சிஎஸ்கே இவரை பென் ஸ்டோக்ஸை எடுத்தது போல் பெரிய தொகைக்கு சென்றும் கூட எடுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ