உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெவ்வேறு சமூகத்தினரான சங்கர் மற்றும் கவுசல்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் கவுசல்யாவின் குடும்பத்தினர் அவர்களை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். கடந்த 2016 மார்ச் 13 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய் மாமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொரு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு என்ற கலைக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சக்தி என்பவரும் கெளசல்யாவும் காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்கு காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திருமணம் நடைபெற்றது. கெளசல்யாவும், சக்தியும் திருமண உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மணமக்கள் இருவரும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பறை இசைத்து இருவரும் ஆடினர்.