தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 இடங்களுக்கு கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய 29 ஆம் தேதி கடைசி நாளாகும். மே 23 ஆம் தேதி அனைத்து தொகுதிகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரு,ம் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.25,000 செலுத்தி விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.