அமரன் படம் வெறுப்பை விதைக்கும் ஒரு அரசியல் அஜெண்டா - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு!

அமரன் படம் தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா என்று எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Nov 4, 2024, 09:43 AM IST
    அமரன் படம் வெறுப்பை விதைக்கிறது.
    ஒரு சமூகத்தை குற்ற பரம்பரையாக மாற்றுகின்றனர்.
    எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு.
அமரன் படம் வெறுப்பை விதைக்கும் ஒரு அரசியல் அஜெண்டா - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு! title=

அமரன் படம் தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா என்று எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது. தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டியதாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு மரணத்தை உணர்வுப் பூர்வமாக சொல்கிறோம் என்கிற பெயரில், தொடர்ந்து ஓர் சமூகத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிப்பது என்பது வேதனையியின் உச்சமாகும். 

மேலும் படிக்க | கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி

திரைத்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய வெறுப்பை விதைக்கும் செயல் ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது. இந்திய இராணுவத்தில் பணியாற்றி உயிர்நீத்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் திரைப்படமாக அமரன் பேசப்பட்டாலும், இப்படம் வெறுப்பை விதைக்கும் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் அஜெண்டாவை வழிமொழிந்துள்ளது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. தேச விடுதலைப் போராட்டத்தின் வீரமிக்க முழக்கமாகவும், ஜனநாயக போராட்டக் குரல்களின் மூச்சாகவும் இருந்த ஆஸாதி முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாகவும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பஜ்ரங்தள் போன்ற மதவாத அமைப்புகளின் ஜெய் பஜ்ரங்பலி கோஷத்தை தேசப்பக்தி கோஷமாகவும் பொதுப்புத்தியில் கொண்டு சேர்க்க இப்படத்தின் இயக்குநர் மெனக்கெட்டுள்ளார் என்றே தெரிகிறது. 

பல தசாப்தங்களாக காஷ்மீரிகள் அன்றாடம் படும் அவலங்களை எல்லாம் மறைத்துவிட்டு, சங்பரிவாரின் எண்ணத்தையே காட்சிபடுத்தியுள்ளார் இயக்குநர். சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தால் காஷ்மீர் மக்கள் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள், சொல்லொனா துன்பங்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. பாதுகாப்பு படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட கணவன் இறந்துவிட்டானா இல்லையா என்றுகூடத் தெரியாமல், அரை விதவைகளாக வாழும் காஷ்மீர் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், காஷ்மீர் ஆண்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களது மனைவிகளை விட்டுச் சென்றதால் தான் அங்குள்ள பெண்களில் அதிகமானோர் அரை விதவைகளாக இருப்பதாக திரைப்படம் காட்டியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, வடிகட்டிய பொய் பிரச்சாரமுமாகும்.

டெல்லி பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு, நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட்டு மனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்டார் அப்சல் குரு என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.  ஆனால், இந்த அமரன்  திரைப்படத்தில், அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குப் பிறகு, அதற்கு பழிதீர்க்க தொப்பி ஜிப்பா அணிந்த காஷ்மீர் சிறுவர்கள், வாள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி பெறுவது போல இயக்குநர் காட்டியுள்ளார். ஆனால், அதுமாதிரியான எந்த நிகழ்வுகளும் நடந்ததாக ஆவணங்களும், செய்திகளும் இல்லாதபோது சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அரசியல் அஜெண்டாவை வரலாறாக்க இயக்குநர் முயன்றுள்ளார். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியே இந்த அமரன் திரைப்படம். பொதுப்புத்தியில் தவறான எண்ணங்களை விதைத்த காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படமோ, அதே அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படம்தான் இந்த அமரன் திரைப்படமும்.

ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டாவே அமரன் திரைப்படமாகும். ஒருவரை ஹீரோவாக காட்ட, இத்திரைப்படம் ஒரு சமூகத்தையே பிரிவினைவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளது. அதேபோல் சங்பரிவாரத்தின் எண்ணத்தை தேசபக்தி என்ற போர்வையில், முஸ்லீம்களை தேசவிரோதிகளாகவும் காட்டியுள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு உச்சத்தின் எச்சமாக உள்ளது அமரன் திரைப்படம். 

சங்பரிவாரத்தின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதுமே தமிழகம் எதிரானது. அதேசமயம் இதுபோன்ற திரைப்படங்கள் வாயிலாக தமிழ் மண்ணிலும் நுணுக்கமாக வெறுப்பை பரப்பும் செயல் ஆபத்தானது. சிறந்த நடிப்பு என்பதை கடந்து, அந்த கதையும், நடிப்பும் உருவாக்கும் வெறுப்பு எனும் நுண்ணரசியலை கவனத்தில் கொள்ளாமல், காஷ்மீர் மக்களுடன் தமிழகம் எப்போதும் துணை நிற்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்த திரைப்படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் சிலாகித்து பாராட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. முதல்வரின் பாராட்டு  இந்த திரைப்படத்தின்  விளம்பர தூதராக அவரை மாற்றியிருக்கிறது.

வெறுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அல்லது திணிக்கப்பட்டாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த பாராட்டு, கலை வடிவில் தமிழக மண்ணில் வெறுப்பை விதைக்கும் ஊக்கியாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பம் சார்ந்த நிறுவனம் ஒன்று இந்த திரைப்பட வர்த்தகத்தில் பங்கு கொண்டிருப்பதாலோ என்னவோ ஆரம்பத்திலேயே இந்த படத்தை பாராட்டி  ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக் குரல்களை அவர் மௌனியாக்கி  விட்டார் என்றே தோன்றுகிறது. இது ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற வெறுப்பை திணிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக தங்களது குரல்களை வலுவாக எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தீபாவளி பண்டிகை: 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News